நான் சென்று வந்த சிவாலயங்களின் அமைவிடங்கள், செல்லும் வழித்தடங்கள், இறைவனின் திருப்பெயர்கள், தல வரலாறு முதலிய விவரங்கள்- மற்றவருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வலைப்பதிவு

Tuesday, May 21, 2013

திருஅரசிலீஸ்வரர் - அரசிலி

          திருஅரசலீஸ்வரர்  திருக்கோயில்


                                                     திருஅரசிலி (ஒழிந்தியாப்பட்டு)

                                                 


               பெரியநாயகி உடனுறை அரசிலிநாதர்

தலவிருட்சம்: அரசமரம்     தீர்த்தம்: வாம, அரசிலிதீர்த்தம்


புதுவையிலிருந்து திண்டிவனம் செல்லும் மார்க்கத்தில்
தைலாபுரம் கடந்த பிறகு ECR சாலையில்
ஒழிந்தியாபட்டில் வலது புறம் திரும்பி 2 கி.மீ தொலைவு
சென்றால் ஒழிந்தியாபட்டு அரசிலிநாதர் திருக்கோயிலை
அடையலாம். புதுவையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில்
இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
  கல்வெட்டுச் செய்திகள் : இத்திருக்கோயிலில் உள்ள
ஐந்து கல்வெட்டுக்கள் அரசியலாரால் படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் விக்ரமசோழதேவர், குலோத்துங்க சோழதேவர்
ஆகிய இருவரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். விக்ரமசோழதேவரின் ஆறாவது ஆட்சி ஆண்டுக் காலத்தில் இவ்வூர் ஜயங்கொண்ட
சோழ மண்டலத்து ஓய்மானாடான ”விஜயராஜேந்திர
சோழவள நாட்டுப் பெருவேம்பூர் நாட்டுத் தேவதானம்
திருவரைசிலி” என்றும், பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் “ஓய்மானாட்டுத் திருவரசிலிஎன்றும் ; பதினாறாவது
ஆட்சியாண்டில் “ஜயங்கொண்ட சோழ மண்டலத்து
ஓய்மானாடான விஜயராஜேந்திர சோழவள நாட்டுப்
பெருவேம்பூர் நாட்டுத்திருவரசிலி என்றும் குறிக்கப்
பெற்றுள்ளது. கருவறை வெளிச்சுவரில், ஜயங்கொண்ட சோழமண்டலத்து கோப்பரகேசரி வர்மன் காலத்தியதாகச் சொல்லப்படும் கல்வெட்டுக்கள் உள்ளன.

 கருவறையில் இறைவன் அரசிலிநாதர் 108 ருத்ராட்ச
மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க
விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின்
தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும்
விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை
அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.

வடகிழக்கில் அம்பாள் சன்னதி தெற்கு நோக்கி
உள்ளது. நின்ற திருக்கோலம்.

வாமதேவர் எனும் முனிவர் தான் பெற்ற சாபத்திற்கு
விமோசனம் பெறுவதற்காக பல தலங்களுக்கு
சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு
வந்தபோது ஒரு அரசமரத்திற்கு அருகில் சற்று
நேரம் அமர்ந்து ஒய்வெடுத்தார். உடலுக்கு குளிர்ச்சி
தரும் அரசமரத்தின் அடியில் சற்று நேரம் இருக்கும்
நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே என்று
நினைத்த முனிவர், இங்கு சிவபெருமானுக்கு
ஆலயம் எழுப்பினால் எப்படி
இருக்கும் என மனதில் நினைத்து கொண்டார்.
அவரது எண்ணத்தை அறிந்த சிவன், அரசமரத்திற்கு
அடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.
மகிழ்ந்த வாமதேவ முனிவர் அருகில் உள்ள
தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார்.
என்பெருமான் அவர் முன் காட்சி தந்து சாபத்திற்கு
விமோசனம் தந்தார்.
அரசமரத்தின் கீழ் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியதால்
இத்தலத்திற்கு அரசிலி என்றும், இறைவனுக்கு
அரசலீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது.


தல புராணம்:








வாமதேவ முனிவருக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து
இந்த லிங்கம் பூமியில் புதையுண்டு பொயிற்று.
சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன்
இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவன் மீது
அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்கு
பிள்ளைகள் இல்லை. ஒரு நந்தவனம் அமைத்து
அருகிலுள்ள மற்றொறு சிவலிங்கத்திற்கு வழிபாடுகள்
செய்து வந்தான். பணியாள் ஒருவன் தினமும்
நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்து வரும்
பணியை செய்து வந்தான். ஒரு சமயம் பணியாள்
நந்தவனத்திற்கு சென்றபோது அங்கு மலர்கள் இல்லை. அரண்மனைக்கு திரும்பிய பணியாளன், மன்னனிடம்
செடியில் மலர்கள் இல்லாத விபரத்தை கூறினான்.
மன்னரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,
வேறு மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்தான்.
மறுநாளும் பணியாள் நந்தவனம் சென்றபோது
அங்கு செடியில் மலர்கள் இல்லை.
அவன் மீண்டும் மன்னரிடம் சென்று தகவலை
கூறினான். மலர்களை அதிகாலையில் யாரோ
பறித்து சென்று விடுவதாக சந்தேகம் கொண்ட  
மன்னன், அடுத்தநாள் காலையில் காவலுருடன்
நந்தவனத்திற்கு சென்று கண்காணித்தான்.
அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் ஒன்று
மலர்களை உண்பதைக் கண்டான். சிவபூஜைக்கு
என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான்
சாப்பிட்டதைக் கண்ட மன்னன்
கோபத்துடன் மான் மீது அம்பு எய்தான். மான்
தப்பிவிட, காவலர்கள் அதனை விரட்டிச் சென்றனர்.
அந்த மான் ஒரு அரசமரத்தின் பொந்திற்குள்
சென்று மறைந்து கொண்டது. மன்னன் மரத்திற்குள்
அம்பு எய்தான். அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது.
மான் அம்பால் தைக்கப்பட்டிருக்கும் என நினைத்த
மன்னன் உள்ளே பார்த்தபோது அங்கு மான் இல்லை.
அதற்கு பதில் பல்லாண்டுகளுக்கு முன் மறைந்த
வாமதேவர் வழிபட்ட லிங்கம் இருந்தது. லிங்க
பாணத்தில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த
மன்னன் சிவனை வேண்டினான். சிவன் மன்னனுக்கு
காட்சி தந்து, மான் வடிவில் அருள்புரிந்தது தான்தான்
என்று உணர்த்தியதோடு, மன்னனுக்கு புத்திர
பாக்கியமும் கொடுத்து அருளினார். அதன்பின்
மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான்.




சத்தியவிரதனின் மகன் இந்திரசேனன் என்பவனும்
இத்தல இறைவனிடம் அளவில்லாத
பக்தியுடன் வழிபட்ட தலம். இந்த இந்திரசேனன் மகள்
அரசிலிநாதரை வழிபட்டு இத்தலத்திலேயே வாழ்ந்து
இறையடி கூடிய தலம்.

சாளுவ மன்னனும் வாமதேவ முனிவரும் பிரதோஷ
நாளில் பேறு பெற்றதால் விசேஷம்.
பிரதோஷ நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

கோவிலுக்கு எதிரில் உள்ள தீர்த்த குளம் கரைகள்
உடைந்து புதர்கள் மண்டிப் போய், பாசி பிடித்து
காணப்படுகிறது- முறையான பராமரிப்பு இல்லாமையினால்.



குளக்கரையில் பெரிய அரசமரமும், அரசமரத்து கீழ்
விநாயகர் ஒருவரும் உள்ளார்.
கோயில் மதிற் சுற்றுச்சுவர்கள் இடிந்து
பாதுகாப்பில்லாமல் உள்ளன. கோயிலை சார்ந்த
சுற்றியுள்ள இடங்களில் புதர் மண்டிப் போய் காடு
போல் காட்சியளிக்கின்றன.
இவ்வூரில் வாழ்ந்த அறச்செல்வியார் திருமதி.ஜெயலட்சுமி
அம்மையார் ஏற்படுத்திய அறக்கட்டளையிலிருந்து, பெரு
விழாவில் ஏழாம் நாள் உற்சவம் – தலமகிமைப்படி, அரசமர
வாகன உற்சவமாக விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது.

கோயிலுக்கு சற்று தொலைவில் உள்ள ஞானசம்பந்தர்
மடம் என்று சொல்லப்படும் கட்டிடம் இந்த அம்மையார்
கட்டிக் கொடுத்தது. பராமரிப்பு இல்லாததால் பாழடைந்துபோய்
– யாரோ பரதேசிகளுக்கு புகலிடமாக உள்ளது.




வைகாசி விசாகத்தில் பத்து  நாட்களுக்குப்
பெரு விழா  நடைபெறும். சிரவையாதீனம் கௌமார
மடாலயம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் இத்தலத்தின் மேல்
பாடல்களைப்  பாடியுள்ளார்  எனத் தெரிகிறது.

இது தேவார பாடல் பெற்ற 263 தலம்.
ஞானசம்பந்தப் பெருமான் இத்தலத்தை தரிசித்து
பாடிய பாடல் :

பதிகம் : சம்பந்தர் தேவாரம்
2-ம் திருமுறை -1
  



”பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய புனற்கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியம் தோள்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம் அர சிலியே.”


  “மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப்
  புக்க வூரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை
  தக்க நூல்திகழ் மார்பில் தவள வெண் ணீறணிந் தாமை
  அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கிடம் அரசிலியே
                                              (சம்பந்தர்)



        -----------------------------------தேர்ந்தவர்கள்
      தத்தமது மதியாற்சாரும் அரிசிலியூர்
      உத்தம மெய்ஞ்ஞான ஒழுக்கமே
                               (அருட்பா)


இத்தலத்திற்கு அருகாமையில்  ‘இரும்பை மாகாளம்
என்னும் பாடல் பெற்ற தலமும், 5 கி.மீ தொலைவில்
“திருவக்கரை” என்ற பாடல் பெற்ற தலமும் உள்ளன.


2 comments:

radjasiva said...
This comment has been removed by the author. May 21, 2013 at 10:14 PM
radjasiva said...
This comment has been removed by the author. May 21, 2013 at 10:15 PM

Post a Comment